கலாம் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார் - ராஜ்நாத் சிங் புகழாரம்: மக்கள் ஜனாதிபதியாக நினைவில் நிற்கிறார் என ஜே.பி. நட்டா பெருமிதம்


கலாம் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார் - ராஜ்நாத் சிங் புகழாரம்: மக்கள் ஜனாதிபதியாக நினைவில் நிற்கிறார் என ஜே.பி. நட்டா பெருமிதம்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:10 AM IST (Updated: 15 Oct 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஜனாதிபதி கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,என அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய இவரின் பிறந்த நாளை ஐ.நா. சபை 2010ல் உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV- III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

இவர் பத்ம பூஷண்(1981), பத்ம விபூஷண்(1990), பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.

இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்தநிலையில் மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பதிவில், 

புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பதிவில், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியவர். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவில் நிற்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.



Next Story