மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்


மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது -  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2020 12:15 AM GMT (Updated: 15 Oct 2020 7:59 PM GMT)

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் மத்தியஅரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

ஆனால் இந்த இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தக்கோரி தமிழக அரசு மற்றும் அ.தி. மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக் களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் இருப்பதை போல 27 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும்பதிலளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் வருமாறு:-

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா:- அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை.

ஏனெனில் நீட் விண்ணப்பங்கள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதில் மாணவர்கள் சார்ந்துள்ள இட ஒதுக்கீடு பிரிவை குறிப்பிடுகின்றனர். அந்த இட ஒதுக்கீடு பிரிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. எனவே இட ஒதுக்கீடு முறை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டாகிவிட்டது. நீட் முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகின்றன. கவுன்சிலிங் ஒரு வாரத்துக்குள் (20 அல்லது 22-ம் தேதி) தொடங்கவுள்ளது என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி:- இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக் கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துவதில் தவறில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைப்போல 27 சதவீதத்தையாவது இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம்.

அ.தி.மு.க. சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன்:- அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் 15 சதவீத இடங்கள், தமிழக அரசின் 1993-ம் ஆண்டு இட ஒதுக்கீடு சட்டத்தின்படி நிரப்பப்பட வேண்டும். இந்த 15 சதவீத இடங்களில் தமிழக மாணவர்களும், பிற மாநில மாணவர்களும் சேர முடியும். அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக் காக போராடி வருகிறோம்.

கேவியட் மனுதாரர் டி.ஜி. பாபு சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன்:- மத்திய அரசு இடங்களில் 15 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற அபய்நாத் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் 15 சதவீத இடங்களில் உறைவிட முன்னுரிமை அடிப்படையில் தமிழக மாணவர்கள் பலன் அடைவார்கள். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக் கீடு அளிக்கும்போது ஏன் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க கூடாது?

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங்:- அகில இந்திய இட ஒதுக்கீடு என்பது அந்தந்த மாநில மாணவர்களுக்கு உறைவிட முன்னுரிமை அளிக்கக்கூடாது என்பதாகும். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் 400 மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்களில் சேருவதற்கான இட ஒதுக்கீடு முறை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேர் தயாராக உள்ளது.

மாணவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் சேருகின்றனர் என்ற பட்டியலை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்ப இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பிடிக்கும். 15 சதவீத இடங்களில் 27 சதவீத இட ஒதுக் கீட்டை தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்துவது நிச்சயமாக சாத்தியமற்ற ஒன்று. 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்த முடியாது. இதற்கு அனுமதி அளித்தால் பிற மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும்.

இவ்வாறு வாதங்கள் நடந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


Next Story