பலாத்கார முயற்சி தோல்வி; முதலாளியின் மகன் சிறுமியை தீ வைத்து, எரித்து கொன்ற கொடூரம்


பலாத்கார முயற்சி தோல்வி; முதலாளியின் மகன் சிறுமியை தீ வைத்து, எரித்து கொன்ற கொடூரம்
x
தினத்தந்தி 16 Oct 2020 7:17 PM IST (Updated: 16 Oct 2020 7:17 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் பாலியல் பலாத்கார முயற்சி தோல்வி அடைந்த ஆத்திரத்தில் முதலாளியின் மகன் தீ வைத்து, எரித்ததில் 27 நாட்களுக்கு பின் சிறுமி உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் வீட்டு பணியாளாக 13 வயது சிறுமி வேலை செய்து வந்துள்ளார்.  கடந்த செப்டம்பர் 19ந்தேதி முதலாளியின் மகன் (வயது 26) வீட்டுக்கு வந்துள்ளார்.  இதற்காக சிறுமி கதவை திறந்து விட்டுள்ளார்.

வீட்டில் நுழைந்தவுடன் அந்த நபர் சிறுமியை தாக்கியுள்ளார்.  பின்னர் சிறுமியை இழுத்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதனை சிறுமி எதிர்த்து உள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த அந்நபர் அருகேயிருந்த மண்ணெண்ணெயை எடுத்து சிறுமி மீது ஊற்றி, தீ வைத்து எரித்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த நபரின் தந்தை ஓடி வந்து காப்பாற்ற முயற்சித்துள்ளார்.  ஆனால் சிறுமிக்கு 70 சதவீத காயங்கள் ஏற்பட்டு உள்ளன.  பின்பு உடனடியாக கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 17 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதன்பின்னர் கடந்த 5ந்தேதி ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு உஸ்மானியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  பின்னர் கடந்த 8ந்தேதி ரெயின்போ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

எனினும் 27 நாட்களாக அளித்து வந்த சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8 மணியளவில் சிறுமி உயிரிழந்து உள்ளார்.  அவரது உடலை கம்மம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 6ந்தேதி கம்மம் போலீஸ் கமிஷனர் தப்சீர் இக்பால் சிகிச்சை பெற்ற சிறுமியை சந்தித்துள்ளார்.  பின்னர் நடந்த சம்பவங்களை சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  பலாத்கார முயற்சி, கொலை முயற்சி, போக்சோ சட்டம், தடயங்களை மறைத்தல் மற்றும் கொலை ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story