கேரள தங்க கடத்தல் வழக்கு; சிவசங்கர் ஐ.சி.யூ.வில் அனுமதி


கேரள தங்க கடத்தல் வழக்கு; சிவசங்கர் ஐ.சி.யூ.வில் அனுமதி
x
தினத்தந்தி 16 Oct 2020 4:03 PM GMT (Updated: 16 Oct 2020 4:03 PM GMT)

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  அவர் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.  அவரது மனு வருகிற 23ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  அதுவரை அவரை கைது செய்ய தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

என்.ஐ.ஏ. மற்றும் சுங்க இலாகா ஆகியவை மொத்தம் 90 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளன.  100 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடந்து முடிந்துள்ளன.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு சிவசங்கர் ஆஜராகும்படி சுங்க இலாக துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.  ஆனால், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இதனை தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகளும் மருத்துவமனையில் உள்ளனர்.

Next Story