பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு-பிரதமர் மோடி அறிவிப்பு


பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு-பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 5:46 PM GMT (Updated: 16 Oct 2020 6:49 PM GMT)

நமது நாட்டில் தற்போது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18, ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 என உள்ளது.

புதுடெல்லி,

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது, இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பெண்களின் திருமண வயது, ஊட்டசத்து குறைபாடு, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:-

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை பற்றியும், அதன்மீது அரசு எப்போது முடிவு எடுக்கும் எனவும் கேட்டு நாடு முழுவதும் இருந்து பெண்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த குழு தனது பரிந்துரையை அளித்த உடன் அதுபற்றிய முடிவை அரசு விரைவாக எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை சமாளிக்க ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை எங்கள் அரசு எடுத்துள்ளது. அதிக ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணமான அனைத்து காரணிகளையும் கண்டறிவதற்கான பல பரிமாண உத்தியை அரசு பின்பற்றி வருகிறது. நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அரசு 11 கோடி கழிவறைகளை கட்டி உள்ளது. குழாய் வழி குடிநீரை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு ஜல்ஜீவன் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.

ஏழைப்பெண்களுக்கு அரசு ரூ.1 என்ற மலிவு விலையில் நாப்கின்களை வழங்குகிறது. இந்த முயற்சிகளின் பலனாக முதல் முறையாக நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் ஆண்களை விட பெண்களின் அளவு அதிகமாக உள்ளது. விவசாய பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு வலையில் கொள்முதல் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இது நாட்டின் உணவு பாதுகாப்பில் ஒரு முக்கியமான அங்கம் ஆகும். குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குவதை அறிவியியல் ரீதியில் தொடரும் வகையில், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story