புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி


புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2020 5:00 AM IST (Updated: 17 Oct 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் 2050-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இ.பி.ஜி. அறக்கட்டளையின் தலைவருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போதைய உலகளாவிய கல்வி சூழலை பார்க்கும்போது புதிய தேசிய கல்வி கொள்கை மிகவும் அவசியம் ஆகும். இந்திய கல்வி முறையை உலகளாவிய கல்வி முறைக்கு உயர்த்துவதும், மனப்பாடம் செய்து கல்வி கற்கும் முறையை மாற்றி, மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கை, தேசப் பெருமிதம் ஆகியவற்றை ஊட்டும் வகையிலும் இந்த கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 1986-ம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கல்வி ஆவணம் ஆகும். ஏராளமான நன்னெறிகளுக்கு வழிவகுக்கும் நிலையில், அதற்கு எதிராக விமர்சிப்பது பண்புள்ள செயல் அல்ல. இந்திய மேம்பாட்டுக்கு நல்ல விளைவுகள் ஏற்படும் என்பதால் தேசிய கல்வி கொள்கை பாராட்டத்தக்கது.

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் இந்தியா 2050-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாறும். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்று தமிழக அரசு கூறியிருப்பது தவறு. மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. நல்ல வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கான உயர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. அரசு தரப்பில் முறையாக ஆராய்ச்சி செய்திருந்தால், உயர் சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என்று கூறியிருக்கமாட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நல்ல நோக்கத்துக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதில் தவறு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story