இலங்கை பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு பயிற்சி அளித்த கருப்பு பூனைப்படை
இலங்கை பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு கருப்பு பூனைப்படை பயிற்சி அளித்துள்ளதாக அதன் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
குர்கான்,
இலங்கை பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு கருப்பு பூனைப்படை பயிற்சி அளித்துள்ளதாக அதன் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
கருப்பு பூனைப்படை எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), கடந்த 1984-ம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக விசேஷமாக உருவாக்கப்பட்டது.
மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் அதன் பணி ஆகும்.
அந்த படையின் 36-வது ஆண்டு தினம், டெல்லி அருகே குர்கானில் உள்ள அதன் முகாமில் நேற்று நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.தேஸ்வால் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
பயங்கரவாதம் என்பது சிக்கலானதாகவும், உலக பிரச்சினையாகவும் ஆகிவிட்டது. பயங்கரவாதிகளின் வியூகங்கள் மாறிவிட்டன. நவீன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்.ஆகவே, அவர்களை சமாளிக்க தேசிய பாதுகாப்பு படை, தனது ஆயுத பலத்தையும், தொழில்நுட்பத்திறனையும், பயிற்சி திறனையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
தேசிய பாதுகாப்பு படையில், நெருக்கமான பாதுகாப்பு படை என்ற பிரிவு உள்ளது. அந்த படை, தற்போது 13 முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. கொரோனா காலத்திலும், அந்த பிரமுகர்கள் பங்கேற்ற சுமார் 4 ஆயிரம் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அளித்துள்ளது.
மேலும், இலங்கை பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்த 21 பேருக்கு இந்த படை, நெருக்கமாக பாதுகாப்பு அளிக்கும் நுணுக்கங்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளது. இந்த பயிற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்திய பிரதமருக்கு இலங்கை பிரதமர் கடிதம் எழுதி உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீங்கு செய்தால் நடவடிக்கை
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எந்த நாடாவது தீங்கிழைக்க நினைத்தால், அதை முறியடிக்க உறுதியான வழியில் உரிய நடவடிக்கை எடுக்கும் திறன், இந்தியாவுக்கு உள்ளது.
தர்மத்தை கடைப்பிடிப்பது என்றால், சவால் நேரத்தில் இந்தியா அமைதியாக உட்கார்ந்திருக்கும் என்று அர்த்தம் அல்ல.
பயங்கரவாதிகளும் நவீன ஆயுதங்களை வைத்திருப்பதால், பயிற்சி மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய பாதுகாப்பு படை முன்னணியில் இருக்க வேண்டும். உலகத்தரம்வாய்ந்த படையாக உருவெடுக்க அப்படைக்கு நவீன ஆயுதங்களும், சாதனங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story