நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய பட்டியல் வெளியீடு


நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 Oct 2020 12:50 PM IST (Updated: 17 Oct 2020 3:42 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த தேர்ச்சிப் பட்டியலில் மாநில வாரியான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இதில் குறிப்பாக திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தவறுகளை திருத்தம் செய்து புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்போது நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய புள்ளிவிவரப் பட்டியல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் - 3,536 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 1,738 பேர், உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் - 12,047 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 7,323 பேர், தெலுங்கானாவில் தேர்வு எழுதியோர் - 50,392 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் - 28,093 பேர் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Next Story