இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனைக்கு அனுமதி


இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Oct 2020 7:15 PM GMT (Updated: 17 Oct 2020 7:11 PM GMT)

இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி, 

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்கு ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ரஷியா உருவாக்கி உள்ளது. அங்கு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, இதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கும், தடுப்பூசியை வினியோகம் செய்யவும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன், ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உரிய ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்த உடன் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுக்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், 10 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை வினியோகம் செய்யும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் டாக்டர் ரெட்டிஸ்லேபரட்டரிஸ் சமீபத்தில் முறைப்படி விண்ணப்பித்தது.

தற்போது, இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது அனுமதியை வழங்கி விட்டது என நேற்று ரஷிய நேரடி முதலீட்டு நிதியமும், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசும் நேற்று அறிவித்துள்ளன.

இதுபற்றி ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், “இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய மருத்துவ பரிசோதனை தரவுகளுக்கு கூடுதலாக ரஷியாவின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்து பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தரவுகளை வழங்குவோம். இது இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மருத்துவ வளர்ச்சியை பலப்படுத்தும்” என குறிப்பிட்டார்.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்க பிராந்திய அலுவலகத்தின் தடுப்பூசி பிரிவு நிர்வாகியான டாக்டர் ரிச்சர்ட் மிஹிகோ, மாஸ்கோ செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தடுப்பூசியின் விளைவு (நோய் எதிர்ப்புச்சக்தி) எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை இப்போது கணித்து கூறுவது கடினமானது. புளூவை (காய்ச்சல்) பொறுத்தமட்டில் வைரசின் வெவ்வேறு திரிபுகளைப் பொறுத்து, தடுப்பூசிகளை பெரும்பாலும் ஆண்டுதோறும் திரும்பத்திரும்ப போட வேண்டிய தேவை இருக்கிறது. 

இந்த வைரஸ் வடக்கு, மேற்கு நாடுகளில் பருவகால வைரசாக இருப்பதே இதற்கு காரணம். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தவரையில் அப்படி ஆண்டுதோறும் திரும்பத்திரும்ப போட வேண்டிய தேவை இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

தென் ஆப்பிரிக்காவில் பல தடுப்பூசிகள் 3-ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story