புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Oct 2020 12:05 AM GMT (Updated: 18 Oct 2020 12:38 AM GMT)

வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

சண்டிகர், 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானாவில் டிராக்டர் பேரணியையும் நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பஞ்சாபில் நேற்று அவர் 2-ம் கட்ட ‘ஸ்மார்ட் கிராமம் பிரசாரத்தை’ தொடங்கி வைத்தார்.

மெய்நிகர் முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வேளாண் சட்டங்கள் குறித்து மீண்டும் மத்திய அரசை குற்றம் சாட்டினார். அவர் கூறும்போது, ‘மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களும், நாட்டின் ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான வெளிப்படையான தாக்குதல் ஆகும். அவர்களின் ரத்தம் மற்றும் வியர்வையை இந்த சட்டங்கள் கடுமையாக தாக்குகிறது. இதை விவசாயிகளும், தொழிலாளர்களும் உணர்ந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்தினால், ஒட்டுமொத்த நாடும் பலவீனமடையும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். சட்டசபைதான் கட்டிடம் என்றால், பஞ்சாயத்துகளும், ஊராட்சிகளும்தான் அடித்தளம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த அடித்தளத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடுவதாகவும், இதுதான் காங்கிரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள வித்தியாசம் எனவும் தெரிவித்தார்.

Next Story