அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றம்: இரு மாநில முதல்-மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு


அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றம்: இரு மாநில முதல்-மந்திரிகள் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 19 Oct 2020 6:50 AM GMT (Updated: 19 Oct 2020 6:50 AM GMT)

அசாம், மிசோரம் மாநில எல்லையில் பதற்றத்தை அடுத்து இருமாநில முதல்-மந்திரிகளும் தொலைபேசியில் பேச்சு நடத்தி உள்ளனர்.

கவுகாத்தி,

அசாம்-மிசோரம் மாநில எல்லை பகுதியான பராக் பள்ளத்தாக்கின் கச்சார் மற்றும் கரிம்கஞ்சில், அசாம் மாநிலத்தின் சில பகுதிகளை சட்ட விரோதமாக, மிசோரம் மாநிலத்தை சேர்ந்த குற்றவாளிகளால் சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து சிங்காலா காப்புக் காட்டு பகுதியில் உள்ள சோட்டாபூபித் பந்த் பகுதியில் 144 தடை உத்தரவை கரீம் கஞ்ச் மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மிசோரம், அசாம் மாநில முதல்வர்கள் சட்டம் ஒழுங்கை பேண உறுதிபூண்டு உள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை பேணவும் முடிவு செய்துள்ளதாக, மிசோரம் முதல்-மந்திரி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை மந்திரி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்டநாள் எதிர்பார்த்த இத்தகைய அணுகுமுறையை அசாம் முதல்-மந்திரி மேற்கொண்டு உள்ளதாகவும், இத்தகையை நடைமுறையே  பிரச்சனைக்கு தீர்வுக் காண உதவும் என மிசோரம் முதல்-மந்திரி சோரம்தங்கா தெரிவித்துள்ளார். 

ஒருவர் காயமடைந்த நிலையில் மூன்று வீடுகள் மற்றும் சில சாலையோர கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதாக கச்சார் போலீசார் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்ட அசாம் கிராமவாசிகள் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினர்.

மிசோரத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்ததாக அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோரம்தாங்கா சோனோவாலிடம், அமைதியைப் பராமரிக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story