பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்


பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்
x
தினத்தந்தி 20 Oct 2020 4:32 PM GMT (Updated: 20 Oct 2020 4:32 PM GMT)

பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ பகிரப்பட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.

புதுடெல்லி,

பூமியில் பல உயிரினங்கள் வசித்தபோதிலும் அவற்றில் பல ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன.  மனிதர்களில் மாறுபட்ட குணங்களை கொண்டவர்களை, வசதிக்கேற்றபடி தங்களை தக்க வைத்து கொள்பவர்களை பச்சோந்தி என கூற கேள்விபட்டிருப்போம். 

ஆனால் பச்சோந்திகள் எதிரிகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ளவே, நிறம் மாறுகின்றன.  பச்சோந்தி இனங்கள் பல்லிகளை போன்று முட்டைகளை இட கூடியவை.  ஆனாலும் குஞ்சுகளை உடலில் சுமந்து நேரம் வரும்பொழுது, குட்டிகளை ஈனும் தன்மையையும் அவை கொண்டிருக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், பச்சோந்தி ஒன்று குட்டியை ஈனும் காட்சிகள் உள்ளன.  லட்சக்கணக்கானோரை ஈர்த்துள்ள அந்த வீடியோவில் மரம் ஒன்றில், அதன் கிளையை பற்றி பிடித்தபடி பச்சோந்தி ஒன்று நின்றவாறு உள்ளது.

சிறிது நேரம் சென்ற பின்னர் அது தனது குட்டியை ஈன்றது.  இதில் ஆச்சரியம் என்னவெனில், தொடக்கத்தில் பந்து வடிவத்தில் இருந்த அந்த குட்டியானது, மர கிளை வழியே உருண்டு பின் கீழே விழுகிறது.

ஆனால் நல்ல வேளையாக கிளையில் இருந்த இலை ஒன்றின் மேல் அது விழுந்துள்ளது.  அதுவும் கிழிந்த இலை.  பின்பு அந்த பந்து விரிந்து குட்டி பச்சோந்தியாக உருப்பெறுகிறது.

உலகை முதன்முறையாக காணும் அந்த குட்டி பச்சோந்தி சுறுசுறுப்புடன் தனது முன்னங்கால்களை நீட்டி அருகேயுள்ள இலையை பற்றி கொள்ள முயற்சிக்கிறது.  ஆனால் அது தோல்வியில் முடிய இருந்த இலையிலேயே தொற்றி கொள்கிறது.

இந்த அரிய காட்சிகள் கொண்ட வீடியோ பதிவானது பகிரப்பட்டு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.

Next Story