ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை: கோவிராப்'- பிற்கு ஐசிஎம்ஆர் அனுமதி


ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை: கோவிராப்- பிற்கு ஐசிஎம்ஆர் அனுமதி
x
தினத்தந்தி 21 Oct 2020 4:29 PM GMT (Updated: 2020-10-21T21:59:38+05:30)

கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள பரிசோதனைக் கருவியான 'கோவிராப்'- பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு, பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரும் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசும், இந்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து அனுமதி வழங்கி வருகின்றன. அந்த வகையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இதற்கான உரிமத்தை பெறுவது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தை அணுகி வருகின்றன. 

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளை நடத்தி, இந்த கோவிட்-19 கண்டறியும் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள பரிசோதனைக் கருவியான 'கோவிராப்'- பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அனுமதி வழங்கியுள்ளது. 

எளிய முறையில், குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணி நேரத்தில் செல்பேசியின் செயலியின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தின் மற்றொரு முக்கிய வளர்ச்சியான இந்த அறிவிப்பு குறித்து மெய்நிகர் வாயிலாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை மந்திரி டாக்டர் ரமேஷ் பொக்ரியால்,

இந்த புதிய மருத்துவ கண்டுபிடிப்பின் மூலம் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தற்சார்பு இந்தியாவின் இலக்கை எட்டி உள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், குறைந்த அளவு எரிபொருளில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கருவியால் ஊரக இந்தியாவின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். எளிய பயிற்சி முறையின் மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்தக் கருவியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக ரூபாய் 500 கட்டணத்தில் தரமான மற்றும் துல்லியமான கோவிட் பரிசோதனைகள் சாமானிய மக்களையும் சென்றடைந்துள்ளது, அரசு தலையிட்டு, இந்தக் கட்டணத்தை மேலும் குறைக்கும் என்றார் அவர்.

கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தெரிவித்தவாறு, ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக, தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தக் கருவி தயாரிக்கப்பட்டிருப்பது, சாமானிய மக்களுக்கும் தொழில்நுட்பம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story