சம்பள விவகாரம்; டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ராவணன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் முக கவசங்களை அணிந்தபடி தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் மேயரிடம் சம்பள விவகாரம் பற்றி மருத்துவர்கள் முறையிட்டுள்ளனர். அதற்கு அவர், வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என கூறியுள்ளார்.
எனினும் இதுபற்றி அரசு கவனம் கொள்ளாத நிலையில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகுசிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
இந்த சூழலில் டெல்லியில் இந்து ராவ் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரத தொடர் போராட்டத்தின் அடையாளம் ஆக ராவணன் உருவ பொம்மை ஒன்றை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அரசு எங்களை கவனத்தில் கொள்ளும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story