சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; ஒற்றுமைக்கான சிலையில் பிரதமர் மோடி மலரஞ்சலி
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஒற்றுமைக்கான சிலையில் பிரதமர் மோடி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் பட்டேலுக்கு குஜராத்தின் கெவாடியா நகரில் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன், 182 மீட்டர் உயரத்துடன் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது.
பட்டேலின் பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று, குஜராத்தின் கெவாடியா நகரில் அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையின் காலடியில் பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story