டெல்லி பேருந்துகள் முழு கொள்ளளவுடன் இயங்க அனுமதி; பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை


டெல்லி பேருந்துகள் முழு கொள்ளளவுடன் இயங்க அனுமதி; பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை
x
தினத்தந்தி 1 Nov 2020 5:59 AM IST (Updated: 1 Nov 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி பேருந்துகளில் 20 பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகரித்தே காணப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 5,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,665-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் 41 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பேருந்துகளில் 20 பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதனால் போக்குவரத்துக்காக பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நவம்பர் 1ஆம் தேதி(இன்று) முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்து செல்லலாம் என்று அறிவித்துள்ளார். எனினும் பேருந்துகளில் நின்றபடி செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பை டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story