கட்சி போஸ்டர்களில் லாலு, ராப்ரி படங்களை தேஜஸ்வி ஏன் சேர்க்கவில்லை? பா.ஜ.க. கேள்வி
பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி போஸ்டர்களில் லாலு, ராப்ரி படங்களை ஏன் தேஜஸ்வி சேர்க்கவில்லை? என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
ஹாஜிப்பூர்,
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த 28ந்தேதி 71 இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. வரும் நவம்பர் 3ந்தேதி நடைபெறும் 2வது கட்ட தேர்தலை முன்னிட்டு பீகாரின் ஹாஜிப்பூர் நகரில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசும்பொழுது, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 3ல் 2 பங்கு பெரும்பான்மையை பெறும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பா.ஜ.க. கூடுதல் இடங்களை கைப்பற்றினாலும் எங்களுடைய தலைவராக நிதீஷ் குமார் நீடித்திடுவார்.
லாலு பிரசாத்தின் தவறான நிர்வாகம் மற்றும் நிதீஷின் நல்ல நிர்வாகம் ஆகியவற்றை மக்கள் நினைவில் கொண்டுள்ளனர் என கூறிய நட்டா, வளர்ச்சியை மக்கள் வேண்டுகின்றனர் என கூறினார்.
லாந்தர்ன் விளக்கு சகாப்தத்தில் (ராஷ்டீரிய ஜனதா தள கட்சி சின்னம்) இருந்து பிரதமர் மோடி மற்றும் நிதீஷ் குமார் தலைமையிலான எல்.இ.டி. சகாப்தத்திற்குள் வர மக்கள் விரும்புகின்றனர்.
பீகார் மக்களை ஒடுக்கி அக்கட்சி ஆட்சி செய்தது. அவர்கள் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவார்களா? 20 லட்சம் மக்கள் மாநிலத்தில் இருந்து தப்பியோடி உள்ளனர். அதற்கு அவர்கள் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். வன ராஜாவாக தேஜஸ்வி இருக்கிறார்.
அவர் ஏன் தனது பெற்றோரான லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரது படங்களை கட்சியின் தேர்தல் போஸ்டர்களில் வெளியிடவில்லை? ஏனெனில், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் குணநலன் பற்றி பீகார் மக்கள் முழுவதும் அறிந்துள்ளனர் என்பது தேஜஸ்விக்கு தெரியும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story