பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கு:  தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 2 Nov 2020 2:23 PM IST (Updated: 2 Nov 2020 2:23 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீது குற்றம் சாட்டி கோர்ட்டில்  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி   எஸ்.கே.யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது, அவரும் ஓய்வு பெற்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதால், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Next Story