காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் - பிரதமர் மோடி


காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 2 Nov 2020 11:46 PM IST (Updated: 2 Nov 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் பல்கலைக்கழகத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. சில மணி நேரங்கள் இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்தது. 

இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் அதில் ஒருவன் வெடிகுண்டுகளை உடலில் கட்டியபடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  22 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று காபூல் காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் காபூல் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். 

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்கானிஸ்தானின் துணிச்சலான போராட்டத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றார். 

Next Story