பீகார் சட்டசபை தேர்தல்; மாலை 3 மணி நிலவரப்படி 44.51% வாக்குகள் பதிவு


பீகார் சட்டசபை தேர்தல்; மாலை 3 மணி நிலவரப்படி 44.51% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2020 4:18 PM IST (Updated: 3 Nov 2020 4:21 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 44.51% வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாட்னா,

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது.

17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  இதன்படி, வாக்காளர்கள் காலை முதல் வரிசையாக வாக்கு சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த 2வது கட்ட தேர்தலில் ஆளுனர் பகு சவுகான், முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்க உள்ளனர். இதேபோன்று, ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் இந்த 2வது கட்ட தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலின் 2வது கட்ட வாக்கு பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 19.26% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலின் 2வது கட்ட வாக்கு பதிவில் மாலை 3 மணி நிலவரப்படி 44.51% வாக்குகள் பதிவாகி உள்ளன என மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.  பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

Next Story