சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெற கேரள அரசு முடிவு


சிபிஐக்கு  வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெற கேரள அரசு முடிவு
x

கேரள அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும்.

திருவனந்தபுரம்,

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது ஒப்புதலை  திரும்ப கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கேரள  அதிகார வரம்புக்கு  உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும்.  ஏற்கனவே, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், மராட்டியம்  ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளது. 

சிபிஐயின் அதிகார வரம்பு

டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் மூலம் சிபிஐ அமைப்பின் அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதற்குச் சமமான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக்காவல் நிறுவனமான சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியை தவிர, எந்த மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு ‘பொது ஒப்புதல்’ அளிப்பது அவசியம்.

Next Story