மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் - கொல்கத்தா சென்றடைந்தார் அமித்ஷா
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார்.
கொல்கத்தா,
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர், தற்போது கொல்கத்தாவிற்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மாநில அரசு மற்றும் காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கிய அமித்ஷாவை வரவேற்பதற்காக பா.ஜ.க. தொண்டர்கள் பலர் அங்கு காத்திருந்தனர். அவர் வந்து சேர்ந்த பின்னர் அவரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியபடி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கடந்த மார்ச் 1ஆம் தேதிக்கு பின்னர் தற்போது தான் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் அடுத்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமித்ஷாவின் தற்போதைய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி மற்றும் கட்சிப்பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தனது மேற்கு வங்க பயணம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த அமித்ஷா, “இரண்டு நாள் பயணமாக நான் இன்று மேற்கு வங்கத்திற்கு வர இருக்கிறேன். பா.ஜ.க. மேற்கு வங்க பிரிவின் செயல்பாட்டாளர்கள், மேற்கு வங்க மக்கள், ஊடகங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள நான் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story