மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஜனவரி 31-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஜனவரி 31-ந்தேதி நடைபெறும் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய இடையூறுகளால் இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைய தொடங்கியிருக்கும் நிலையில், இந்த தேர்வுக்கான புதிய தேதியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 112 நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு, பின்னர் நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 31-ந் தேதி நடைபெறும். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு வசதியாக, இந்த தேர்வு 135 நகரங்களில் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.
இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு ஏராளமான தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருப்பதால், தாங்கள் தேர்வு செய்திருக்கும் நகரங்களை மாற்றியமைக்க ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story