தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவருடன் இன்று சந்திப்பு


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவருடன் இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 10:55 AM IST (Updated: 5 Nov 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்துப் பேசுகிறார்.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று காலை விமானத்தில் புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழக அரசின் புதிய இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை அரசு இல்ல அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு மாலை 4.20 மணிக்கு பிரதமரை சந்திக்க அவரது இல்லத்துக்கு புறப்பட்டார். 4.30 மணிக்கு பிரதமர்-கவர்னர் சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் 20 நிமிடங்களுக்கு மேலாக பேசிக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் கவர்னருக்கு அதற்கு மேலும் அங்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாலை 4.50 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து கவர்னர் வெளியே வந்து, தமிழக அரசு இல்லத்துக்கு சென்றார்.

இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அதிகாரிகள் தரப்பில் இதுபற்றி கூறும்போது, இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்புதான். ஏனென்றால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்க கவர்னர் வருவதில் பல மாதங்கள் இடைவெளி ஆனது. தற்போது தளர்வுகள் அதிகமாக உள்ளதை பயன்படுத்தி கவர்னர் வந்திருக்கிறார் என்றனர்.

ஆனால் அரசியல் வட்டாரத்தில் இது வேறுவிதமாக பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம், பா.ஜ.னதாவின் வேல் யாத்திரை பிரசாரம் போன்றவை பற்றி விவாதிக்கவே கவர்னர் டெல்லி வந்திருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று சந்தித்து பேசுகிறார். 

இந்த சந்திப்புகளுக்கு பிறகு தமிழக கவர்னர் நாளை(வெள்ளிக்கிழமை) சென்னை திரும்புகிறார்.

Next Story