பலாத்கார முயற்சியை தடுத்ததில் பார்வை பறிபோன பெண்


பலாத்கார முயற்சியை தடுத்ததில் பார்வை பறிபோன பெண்
x
தினத்தந்தி 5 Nov 2020 4:59 PM IST (Updated: 5 Nov 2020 4:59 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பாலியல் பலாத்கார முயற்சியை தடுத்ததில் பெண் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது.

புனே,

நாட்டில், வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடம் இவை கிடைத்து விட்டாலும், முறையான கழிவறை வசதி கிடைக்காத மக்கள் பெருமளவில் உள்ளனர்.  இதுபோக கழிவறை வசதி இல்லாத சூழலால், பல மாநிலங்களில் பெண்கள் இரவில் வெளியே செல்ல முற்படுகின்றனர்.

அவர்களை கண்காணித்து வரும் சில கொடூரர்கள், நீண்ட நாட்கள் நோட்டமிட்டு, பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்.  இந்த அல்லல் ஒருபுறம் இருக்க இதனை பெண்களால் வெளியே கூறவும் முடிவதில்லை.  இதனை சாதகமாக்கி கொள்ளும் கயவர்கள் இரவோடு இரவாக தப்பியும் விடுகின்றனர்.

இவை அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு மத்திய அரசு கழிவறை கட்டி கொடுக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தது.

ஏழை, எளியோரும் பயன்பெறும் வகையிலான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் கழிவறை வசதிகளை பெற்று அரசுக்கு நன்றி கூறுகின்றனர்.  இது ஒருபுறம் இருக்க, சில வீடுகளில் திட்டமிடப்படாத வகையில் கட்டப்படும் கழிவறைகளால் அந்த வீட்டு பெண்கள் ஆபத்திற்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது.

மராட்டியத்தின் புனே நகரில் நவாரே கிராமத்தில் வசித்து வரும் 37 வயது பெண் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கழிவறைக்கு இரவில் சென்றுள்ளார்.  அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதனை அந்த பெண் தடுத்துள்ளார்.  இந்த போராட்டத்தில் அந்த நபர் திடீரென பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.  இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  அந்த பெண்ணின் பார்வை முழுவதும் பறிபோயுள்ளது.  இதனால் அந்த பெண்ணால் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியவில்லை.

இதனை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் என புனே நகரத்தின் ஷிரூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அந்த பெண் அருகேயுள்ள சாசூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story