50 சதவீத வருகைப்பதிவுடன் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்த அனுமதி
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளையும் இணைய வழியில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50 சதவீத வருகைப்பதிவுடன் திறக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், வகுப்புகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற உயர்கல்வி நிறுவனங்கள் மாநில அரசுகளின் ஆலோசனைப்படி வகுப்புகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகளில் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகள் தவிர்க்க முடியாத கட்டாய சூழலில் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கல்லூரிக்கு வர அனுமதி அளிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த ஆசிரியர்களை நேரில் வந்து கல்லூரிகளில் சந்திக்கும் போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பக்குதிகளில் கல்லூரிகளை திறக்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story