சண்டிகரில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிப்பு
சண்டிகரில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்,
தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, பலகாரங்கள் செய்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் மகிழ்வது வழக்கம். நமது நாட்டின் வழக்கப்படி தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதியன்று தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. தீபாவளியை கொண்டாடும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்திருந்தது.
அதில், தீபாவளி தினத்தன்று பொது இடங்களில் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, பசுமை பட்டாசுகளை காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் வெடிக்க தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலையொட்டி ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதித்து 3 மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளது. அதாவது பட்டாசு வெடியில் இருந்து வெளிவரும் புகையை கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் சுவாசித்தால் அவர்களின் உடல்நிலை மேலும் பாதிப்படையும். ஆஸ்துமா நோய் உள்ளவர்களின் உடல்நிலையும் இதனால் சீர்கெடும் ஆபத்து உள்ளது என்று அந்த மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து உள்ளது.
இதனால் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து இருப்பதால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே பட்டாசு வெடிக்க அனுமதிக்கும்படியும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகையையொட்டி கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது பற்றி மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி தீபாவளி அன்று கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு சண்டீகரில் மாநிலத்தில் பட்டாசுகளை சண்டிகரில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. சண்டீகரில் மாநிலத்தில் கொரோனா தொற்று மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வகையான பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பால் காற்றின் துகள்களில் அதிகரிக்கும் செறிவானது கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு உகந்த நிலைமைகளை உருவாக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு மத்தியில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story