‘வாய்ப்பு கொடுத்தால் ஐந்து ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம்’ – மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேச்சு
வாய்ப்பு கொடுத்தால் ஐந்து ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம் என்று மேற்கு வங்கத்தில் அமித்ஷா கூறினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றி மம்தாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கோடு அமித்ஷா களம் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் மேற்கு வங்கம் வந்தடைந்தார். கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசியதாவது:
திரிணாமுல் ஆட்சி முடிந்து பாஜக ஆட்சிக்கு வரும். 200க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியில் அமர்வோம். மேற்கு வங்க மக்கள் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமூல் ஆகிய கட்சிக்கு வாய்ப்பு அளித்தீர்கள்.
எங்களுக்கும் ஒரு வாய்ப்பை தாருங்கள். வாய்ப்பு கொடுத்தால் ஐந்து ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம். மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை தடுத்து எல்லைகளை பாதுகாப்பானதாக்குவோம். பாஜக மாற்றத்தைக் கொண்டு வரும் என மக்கள் உணர்கிறார்கள். 2010-ல் மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினார்கள்.
இன்று மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். கொரோனா சூழல் மற்றும் வெள்ள நிவாரணம் போன்றவற்றிலும் கூட ஊழல் செய்வதற்கு திரிணாமூல் வெட்கப்படுவதில்லை. மம்தா பானர்ஜி வாக்கு அரசியல் நடத்துகிறார். கடந்த ஆண்டில் மட்டும் 100 பாஜக உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு எதிரான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் மம்தா முடக்கி வைத்துள்ளார். விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் உதவித்தொகை திட்டத்தையும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story