தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி- கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. கைது


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி- கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 8 Nov 2020 10:20 AM IST (Updated: 8 Nov 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி செய்ததால கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.சி. கமருதீன். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இவர் மஞ்சேஸ்வரத்தில் பேஷன் கோல்டு ஜுவல்லரி என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் மேலாண்மை இயக்குனராக பூக்கோயா தங்கல் என்பவர் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகை கடையில் தங்க நகை சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் காலாவதி முடிந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு உரிய நகைகள் திருப்பி வழங்காமல் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நகை மோசடி தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.சி. கமருதீன், மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கல் ஆகியோருக்கு எதிராக 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நகை மோசடி விவகாரம் தொடர்பாக நேற்று காசர் கோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் பயிற்சி மையத்தில் எம்.சி கமருதீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நகை மோசடியில் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்ததாகவும், மேலும் இந்த வழக்கில் நகைக்கடையின் மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கலை கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story