முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
சமீப காலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் இருப்பவர்கள், பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் நுழைவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில். 2009 ஆம் ஆண்டு, பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான செந்திலுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமம் ஆகும்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் கல்வி பயின்ற இவர், 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில், மாநில அளவில், முதல் நபராக தேர்ச்சி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி கலெக்டராக பணியாற்றினார்.
கர்நாடகாவில் உதவி கலெக்டர், கலெக்டர் என பலப்பொறுப்புகளில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, அவரை அரசாங்கம் பணியிட மாற்றம் செய்ய முயற்சித்தது ஆனால் அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இத சசிகாந்த் செந்தில் மீது மக்கள் வைத்திருந்த பாசத்தை வெளி உலகிற்கு காட்டும் விதத்தில் அமைந்தது.
இதனிடையே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டில் நடக்கும் சில சம்பவங்களை தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மத்திய பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்தும் வந்தார்.
இந்தநிலையில் சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளேன். காங்கிரஸ் வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைத்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றார்.
நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story