டெல்லியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மார்க்கெட் பகுதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


டெல்லியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மார்க்கெட் பகுதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2020 3:15 AM IST (Updated: 9 Nov 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7,745 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,38,529 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொது மக்கள் கடந்த சில மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததால், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள், புதிய துணிகள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாத சூழல் நிலவி வந்தது. இதற்கிடையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால், டெல்லி சரோஜினி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மாதங்கள் கழித்து கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

பொது இடங்களில் செல்லும் போது முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் டெல்லியில் உள்ள குறுகிய சாலை அமைப்புகளை கொண்ட மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதனை தொடர்ந்து பண்டிகை காலம் ஆனாலும் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story