மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? பீகார் சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை


மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? பீகார் சட்டசபை தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2020 5:53 AM IST (Updated: 10 Nov 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதன் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

பாட்னா, 

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.

இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதற்காக 38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் தபால் வாக்குகள் முதலிலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாஸ் கூறினார்.

இந்த தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. குறிப்பாக அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர். வழக்கமாக நண்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் இறுதி முடிவு தெரிய இரவு வரை ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு மையங்களில் மிகுந்த கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன. அந்த வகையில் வேட்பாளரும், அவரது முகவர்களாக 2 பேர் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்சியை பிடிப்பது யார்?

பீகார் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக் காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன. எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியை விட, ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இது ஆளும் நிதிஷ்குமார் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்று ஆளும் தரப்பினர் நம்பிக்கையாக உள்ளனர்.

அதே நேரம் மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி ஆவார். அவ்வாறு அவர் ஆட்சி அமைத்தால், இந்தியாவிலேயே மிக இள வயதில் முதல்-மந்திரி ஆனவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.

இதற்கிடையே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இந்த தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.

இதில் முக்கியமாக மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடந்த இடைத்தேர்தலாகும். அவர்கள் விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்திருந்தது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சி தொடரும். எனவே பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதைத்தவிர உத்தரபிரதேசம், அரியானா, மணிப்பூர், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது. மேலும் பீகாரின் வால்மிகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவும் இன்று வெளியாகிறது.

Next Story