உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகை - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு


உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகை - மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 12 Nov 2020 5:38 AM IST (Updated: 12 Nov 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

வாகனங்கள்,ஜவுளி, செல்போன் தயாரிப் பாளர்களை ஊக்கு விக்கும் வகையில் உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகைகள் வழங்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

21-ம் நூற்றாண்டின் மாபெரும் பேரிடராக, கொரோனா எனும் கண்ணுக்கு தெரியா எதிரியை மனித குலம் எதிர்கொண்டு வருகிறது.

இந்த கொடிய வைரசின் உடனடி விளைவாக, கோடிக்கணக்கான மக்களை நோய்க்கு உட்படுத்தி இருப்பதுடன், லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை காவு கொண்டும் வருகிறது. அதே நேரம் நீண்டகால விளைவாக, உலக பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு தள்ளி வருகிறது. நாடுகளின் உற்பத்தி, வினியோகம், வர்த்தகம் என அனைத்து துறைகளும் முடங்கிவிட்டன.

எனவே கொரோனாவின் கொடூர கரங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதை அரசுகள் முதற்கடமையாக கொண்டு ஒருபுறம் செயலாற்றி வருகின்றன. மறுபுறம் தங்கள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் பலமாக பதித்து வரும் கொரோனாவின் தடங்களை அழிக்கவும் வீரியமாக போராடி வருகின்றன.

உலகின் பிற நாடுகளைப்போலவே இந்தியாவிலும் பொருளாதாரத்தையும் கொரோனாவின் கோர முகம் பதம் பார்த்து விட்டது. கொரோனாவுக்காக நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு, இந்தியாவின் தொழில் துறையை மொத்தமாக பாதித்ததுடன், நாட்டின் பொருளாதாரத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டது.

இந்த பயங்கரமான சூழலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் உற்பத்தி துறையை மீட்டெடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த துறைகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு ரூ.2 லட்சம் கோடி சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ‘உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை’ வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரூ.2 லட்சம் கோடி

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, 10 முக்கியமான துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த திட்டம் இந்திய உற்பத்தியாளர்களை உலக அளவில் போட்டிபோட வைக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்’ என்று தெரிவித்தார்.

இந்த ஊக்கத்தொகை திட்டத்தில் 10 உற்பத்தி துறைகள் பயன்பெறும் என்று குறிப்பிட்ட ஜவடேகர், இதில் தொலைதொடர்பு, செல்போன் தொழில்துறை, உருக்கு இரும்பு, மருந்து, ஜவுளி, வாகன தொழில்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட துறைகள் அடங்கும் எனவும் கூறினார்.

இதைப்போல உள்கட்டமைப்பு நிலைப்புத்திறன் இடைவெளி நிதி திட்டத்தில் அரசு தனியார் ஒத்துழைப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2024-25-ம் ஆண்டு வரை தொடரவும், மறுசீரமைக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கான செலவினமாக ரூ.8,100 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பில் அரசு தனியார் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும், சொத்துகளை திறம்பட உருவாக்குவதற்கும், அவற்றின் சரியான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கும், பொருளாதார, சமூக அத்தியாவசிய திட்டங்களை வணிகரீதியாக சாத்தியமாக்குவதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த தகவல்களையும் ஜவடேகர் தெரிவித்தார்.

பின்னர் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரி சபை மிகவும் முக்கியமான 2 முடிவுகளை எடுத்திருக்கிறது. என்னை பொறுத்தவரை, இதுபோன்ற நேரத்தில் இந்த 2 திட்டங்களும் நமது பொருளாதாரத்துக்கு சரியான உத்வேகம் தரப்போகிறது. ஏனெனில் நாம் சுயசார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவை உலகளாவிய மதிப்புச்சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு இது உதவி புரியும்.

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை பொறுத்தவரை, இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் இந்தியாவை இணைப்பதற்கும், கூடுதலாக அரசின் தேவையான ஆதரவை உறுதி செய்வதன் மூலம் முக்கியமான துறைகளுக்கு ஊக்கத்தையும் வழங்கும். இந்த ஊக்கத்தொகை பெறும் திட்டத்தில் 10 துறைகள் இணைக்கப்படுகின்றன.

அதாவது மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரி துறைக்காக ரூ.18,100 கோடி ஒதுக்கப்படுகிறது. மேலும் எலட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் (ரூ.5,000 கோடி), ஆட்டோமொபைல்ஸ் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (ரூ.57,042 கோடி), மருந்தகம் மற்றும் மருந்துகள் (ரூ.15,000 கோடி), டெலிகாம் மற்றும் நெட்வொர்க் பொருட்கள் (ரூ.12,195 கோடி), ஜவுளி பொருட்கள் (ரூ.10,683 கோடி) போன்ற துறைகளும் பயன்பெறும்.

இதைத்தவிர உணவு பொருட்கள் (ரூ.10,900 கோடி), அதிக திறன் கொண்ட சோலார் தொகுதிகள் (ரூ.4,500 கோடி) மற்றும் சிறப்பு ஸ்டீல் (ரூ.6,322 கோடி) போன்ற துறைகளும் இந்த திட்டத்தில் இணைக்கப்படுகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது இன்றைய மதிப்பீடு ஆகும். அதாவது நாங்கள் அடையாளம் கண்டுள்ள இந்த 10 துறைகளுக்கு நாங்கள் கொண்டு வரும் புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவை உள்ளடக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதைத்தொடர்ந்து மேற்படி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்காக ரூ.1,45,980 கோடி ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் மற்றுமொரு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஏற்கனவே ரூ.51,311 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story