ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டம்: டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - சிபிஎஸ்இ அறிவிப்பு
ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் சேர, டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப் பணியை சிபிஎஸ்இ தொடங்கி உள்ளது. இதன்படி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒற்றைப் பெண் குழந்தைகள் உதவித்தொகை திட்டங்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10ம் தேதி ஆகும். விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28-ம் தேதி ஆகும்.
10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்கு தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்திய குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள். பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story