“புத்தகம் எழுதுவது மட்டுமே எனது கடமை” - எழுத்தாளர் அருந்ததி ராய் விளக்கம்


“புத்தகம் எழுதுவது மட்டுமே எனது கடமை” - எழுத்தாளர் அருந்ததி ராய் விளக்கம்
x
தினத்தந்தி 13 Nov 2020 10:06 AM IST (Updated: 13 Nov 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

தனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “தோழர்களுடன் ஒரு பயணம்”(Walking with the comrades) என்ற புத்தகம் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் 3வது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் இந்த புத்தகம் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புத்தகத்தில் மாவோயிஸ்டுகளின் செயல்களை நியாயப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக ஏ.பி.வி.பி. அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்தது தனக்கு தெரியாது என்பதால் அதிர்ச்சி, ஆச்சரியம் என எதுவும் தனக்கு ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதற்கு மாறாக தனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்கப்பட்டது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு எழுத்தாளராக புத்தகம் எழுதுவது மட்டுமே தனது கடமை என்றும் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக போராடுவது தனது கடமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

Next Story