5 சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் கொடுமை குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் விசாரணை


5 சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் கொடுமை குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் விசாரணை
x
தினத்தந்தி 14 Nov 2020 9:27 AM IST (Updated: 14 Nov 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக கூறப்பட்ட சமபவத்தில் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த வழக்கு விசாரணை குறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா மற்றும் விசாரணை அதிகாரிகளுடன் ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் கூறியதாவது:-

இந்த விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் தாமாகவே இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இதில், முதல் கட்டமாக இதுவரையில் இந்த விவகாரத்தில் காவல் துறையினர் எந்த அளவிற்கு இந்த வழக்கை விசாரணை செய்துள்ளனர், அடுத்ததாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் ,இறுதியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எங்கள் ஆணையம் கவனம் செலுத்தும்.

இதுவரை இந்த வழக்கை விசாரித்ததில், வெளியூரைச் சேர்ந்த குழந்தைகளை ரூபாய் 3000க்கு விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

தற்போது இந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். காவல் துறை விசாரணை நல்ல படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். 

பொதுவாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடந்தால் தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற வழிமுறைகளை, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதராவிடம் தெரிவித்துள்ளோம். அந்த வழிமுறைகள் 100 சதவீதம் வெற்றியைக் கொடுக்கும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்," என்று ஆனந்த் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து கள விசாரணை அறிக்கைகளை தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவருக்கு அதன் உறுப்பினர் ஆனந்த் அனுப்பி வைத்துள்ளார்.



Next Story