கொரேனா தொற்று; மத்திய மந்திரி அமித்ஷா உடன் கெஜ்ரிவால் அடுத்த வாரம் சந்திப்பு


கொரேனா தொற்று; மத்திய மந்திரி அமித்ஷா உடன் கெஜ்ரிவால் அடுத்த வாரம் சந்திப்பு
x
தினத்தந்தி 14 Nov 2020 8:55 PM GMT (Updated: 14 Nov 2020 8:55 PM GMT)

டெல்லியில் கொரோனா பாதிப்பு, காற்று மாசுபாடு ஆகியவை பற்றி கெஜ்ரிவால் அடுத்த வாரம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன.  கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கின.  கடந்த 13ந்தேதி பலி எண்ணிக்கையும் 100-ஐ கடந்தது.  நாட்டின் கொரோனா வைரசின் தலைநகராக டெல்லி உருமாற கூடும் என டெல்லி உயர் நீதிமன்றம் கூட சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் பண்டிகை காலம் நெருங்குகிறது.  இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.

ஆனால் டெல்லி மக்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்பதுபோல் செயல்படுகின்றனர்.  டெல்லியில் காற்று மாசு ஒருபுறம் மக்களை துன்புறுத்தி கொண்டிருக்க, அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என கூறி பட்டாசுகளை தவிர்க்க அரசு கேட்டு கொண்டது.

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரம் ஆக உயர கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.  இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசின் கீழ் இயங்க கூடிய அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரித்து தரும்படி டெல்லி அரசு கேட்டு கொண்டது.

அடுத்த 7 முதல் 10 நாட்களில் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் வரும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டு டெல்லியில், மத்திய அரசின் கீழ் இயங்க கூடிய அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரித்து தரும்படி கேட்டு கொள்வதற்காக கெஜ்ரிவால் அடுத்த வாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

காற்று மாசு கட்டுப்பாட்டை மேற்கொள்ள பிற மாநிலங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வது, நிதியுதவி உள்ளிட்டவற்றையும் இந்த சந்திப்பில் அவர் கேட்க கூடும் என தெரிகிறது.

Next Story