பீகாரில் நிதிஷ் குமாருடன் 13 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்


பீகாரில் நிதிஷ் குமாருடன் 13 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2020 9:29 AM GMT (Updated: 16 Nov 2020 9:29 AM GMT)

பீகாரில் நிதிஷ் குமார் இன்று முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரது மந்திரி சபையில் 2 துணை முதல் மந்திரிகள் உள்பட 14 பேர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாட்னா,

பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. 

 பா.ஜ.க. கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், பாட்னாவில் எண்.1, அன்னி மார் என்ற முகவரியில் அமைந்துள்ள முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நடந்தது.
பா.ஜ.க. மூத்த தலைவரும், ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங் மேலிட பார்வையாளராக கலந்து கொண்டார். பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி தலைவராக (முதல்-மந்திரியாக) நிதிஷ்குமார் (வயது 69) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நிதிஷ்குமார் சென்றார். கவர்னர் பாகு சவுகானை சந்தித்தார். அவரிடம் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிவித்தார். புதிய அரசு அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார். இதையடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.  பதவி ஏற்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. 

நிதிஷ் குமாருக்கும் அவரது மந்திரிசபையில் இடம்பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நிதிஷ் குமாருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story