கொரோனா பரவல் உச்சம்: டெல்லிக்கு துணை ராணுவ மருத்துவ குழு வரவழைப்பு


கொரோனா பரவல் உச்சம்: டெல்லிக்கு துணை ராணுவ மருத்துவ குழு வரவழைப்பு
x
தினத்தந்தி 19 Nov 2020 1:25 AM GMT (Updated: 19 Nov 2020 1:25 AM GMT)

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. தற்போது, அங்கு கொரோனா பரவலின் 3-வது அலை உச்சத்தில் உள்ளது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துணை ராணுவத்தை சேர்ந்த 45 டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் டெல்லி வரவழைக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டெல்லி விமான நிலையம் அருகில் உள்ள கோவிட் சிறப்பு மருத்துவமனையில் கூடுதலாக 250 தீவிர சிகிச்சை படுக்கை வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இதேபோல கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ள 800 படுக்கை வசதிகள் கொண்ட ரெயில் பெட்டிகளை ரெயில்வே வழங்கி உள்ளது. தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ள அந்த ரெயில் பெட்டிகள் டெல்லியில் உள்ள சாகுர் பஸ்தி ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story