1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்: தர்மேந்திர பிரதான் தகவல்


1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்: தர்மேந்திர பிரதான் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2020 10:16 PM GMT (Updated: 19 Nov 2020 10:16 PM GMT)

1,000 இடங்களில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

போக்குவரத்துக்கு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசு அதிகரிப்பதோடு எரிபொருள் செலவும் அதிகம் ஆகிறது. எனவே இதை குறைப்பதற்காக மாற்று எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்தியாவை எரிவாயு அடிப்படையிலான பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் லட்சிய அடிப்படையில் அதற்கேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெட்ரோலுக்கு மாற்றாக எரிவாயு அடிப்படையில் தற்போது திரவநிலை பெட்ரோல் எரிவாயு (எல்.பி.ஜி.) வாகனங்களும், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) வாகனங்களும் இயங்கி வருகின்றன.

இந்தநிலையில் தற்போது திரவநிலை இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) பயன்படுத்துவதற்கான யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வாகனங்கள் இதை தாராளமாக பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தங்க நாற்கரச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் முக்கியமான இடங்களில் முதற்கட்டமாக 50 திரவநிலை இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை செயலாளர் தருண் கபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மந்திரி தர்மேந்திர பிரதான், “ நமது நாட்டை எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்வதற்காக நன்கு சிந்திக்கப்பட்ட ஒரு யுக்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் திரவநிலை இயற்கை எரிவாயுதான் போக்குவரத்து எரிபொருளாக இருக்கப் போகிறது. இது டீசலை விட 40 சதவீதம் மலிவானது அதுமட்டுமல்ல மிகக் குறைந்த அளவு மாசுபாட்டையே ஏற்படுத்துகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் தங்க நாற்கரச் சாலைகளில் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ஒரு திரவநிலை இயற்கை எரிவாயு நிலையத்தை அரசு அமைக்கும். அதேபோல அனைத்து முக்கிய சாலைகள், தொழில்துறை மையங்கள் மற்றும் சுரங்க சாலைகளில் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும்.

எல்.என்.ஜி. நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் திரவநிலை பெட்ரோல் எரிவாயு நிலையங்களும், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களும் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். எல்.என்.ஜி. என்பது நீண்ட தூர எரிபொருளாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

Next Story