குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23 ஆம் தேதி திறக்கும் முடிவு ஒத்திவைப்பு


குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23 ஆம் தேதி திறக்கும் முடிவு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 10:01 AM GMT (Updated: 20 Nov 2020 10:01 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக, குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை வரும் 23 ஆம் தேதி திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

மேலும் அதற்கான உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை குஜராத் அரசு பிறப்பித்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரித்ததை பரிசீலனை செய்த அரசு, வரும் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களை திறக்கும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story