மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்


மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 20 Nov 2020 11:02 PM GMT (Updated: 20 Nov 2020 11:02 PM GMT)

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

போபால், 

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு 1.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 3,138 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் முதல் முறையாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இவ்வாறு தொற்று அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தொற்று அதிகரித்துள்ள நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்தூர், போபால், குவாலியர், ரட்லாம் மற்றும் விதிஷா ஆகிய 5 நகரங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும் மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என முதல்-மந்திரி தெளிவுபடுத்தி உள்ளார்.

இதற்கிடையே தொற்று அதிகரித்து வரும் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய 3 நகரங்களிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.


Next Story