கொரோனா காலத்திலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்


கொரோனா காலத்திலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்ற எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 23 Nov 2020 11:12 AM GMT (Updated: 23 Nov 2020 11:12 AM GMT)

டெல்லியில் தீவிர கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட காலத்திலும் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டதற்கு பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் டாக்டர் பி.டி. மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கட்டப்பட்ட 76 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே இன்று திறந்து வைத்துள்ளார்.  80 ஆண்டுகளுக்கு மேல் பழமையான எட்டு பங்களாக்கள் இருந்த இடத்தில் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொண்டார்.

சாம்பல் மற்றும் கட்டுமான கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்.இ.டி. விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதன பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் 58வது பிறந்த நாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பசுமை கட்டிட வளாகத்துக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புவாசிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பும், ஆரோக்கியமும் தருவதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்குமிட வசதி அளிப்பது நீண்டகால பிரச்னையாக இருந்து வந்த நிலையில், இப்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்னைகளை தவிர்ப்பதால் அவை முடிவுக்கு வந்துவிடாது, தீர்வு காண்பதால் தான் முடிவுக்கு வரும். பல ஆண்டுகளாக டெல்லியில் பூர்த்தி செய்யப்படாத இதுபோன்ற பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி, உரிய கால அவகாசத்திற்குள் முடித்துள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்பொழுது, டெல்லியில் தீவிர கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட காலத்திலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் கலந்து கொண்டதற்கு பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்து உள்ளார்.  இலக்குகளை எட்டக்கூடிய நமது சாதனையானது, நாம் உண்மையாக அதற்கு அர்ப்பணித்து இருக்கிறோமா என்பதனை சார்ந்தே அமையும் என கூறி தனது உரையை முடித்து கொண்டார்.

Next Story