டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்


டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2020 2:25 AM GMT (Updated: 24 Nov 2020 2:25 AM GMT)

டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சில தினங்களாக டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு இருந்தது. இதனால் பல நாட்களுக்குப் பிறகு காற்று சுத்தமாக இருப்பதாக டெல்லி மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் கடந்த 20 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும் எனவும், அடுத்தடுத்த நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இமய மலையின் மேற்கு பகுதியில் வீசும் காற்றின் மாறுபாடு காரணமாக, டெல்லியில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாசு மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பத்பார்கஞ்ச் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 400 என்ற அளவில் உள்ளது. டெல்லியில் வெப்பநிலை குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 25 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story