இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி


இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 24 Nov 2020 8:42 PM GMT (Updated: 24 Nov 2020 8:42 PM GMT)

இந்தியாவில் முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போட அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக 5 தடுப்பூசிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 4 இறுதிக்கட்டத்திலும், ஒரு தடுப்பூசி முதல் இரு கட்டங்களிலும் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் கட்டமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், எம்.பி. பி.எஸ். மாணவர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் ஒரு கோடி முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதற்கான தரவுகளை 92 சதவீத அரசு ஆஸ்பத்திரிகளும், 55 சதவீத தனியார் ஆஸ்பத்திரிகளும் தந்துள்ளன. எஞ்சியவர்கள் அடுத்த ஒரு வாரத்தில் தரவுகளை அளித்து விடுவார்கள். இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தும்படி மாநில அரசுகளை கேட்டுள்ளோம்” என கூறினார்.

தடுப்பூசி போடுவதற்காக 4 பிரிவினராக மக்களை மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. அவர்கள், டாக்டர்கள், எம்.பி.பி.எஸ். மாணவர்கள், நர்சுகள் மருத்துவ பணியாளர்கள் (ஒரு கோடி பேர்), மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் (2 கோடி பேர்), 50 வயதுக்கு மேற்பட்டோர் (26 கோடி பேர்), நாள்பட்ட நோய்களுடன் கூடிய 50 வயதுக்குட்பட்டோர் ஆவர்.

Next Story