காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு


காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Nov 2020 3:02 AM GMT (Updated: 25 Nov 2020 3:02 AM GMT)

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

சித்ரவதைகளை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை தொடர்பான வழக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இதுதொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் யோகேஷ் கன்னா, தமிழகத்தில் முக்கிய பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,567 காவல் நிலையங்களில் 770-ல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 720 காவல் நிலையங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள காவல் நிலையங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதலே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், முக்கியம் அல்லாத பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், குற்றம்சாட்டப்பட்டவர்களை அடிப்பதற்கு வசதியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வக்கீல் யோகேஷ் கன்னா, காவல் நிலையங்களில் உள்ள லாக்-அப் அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த் தவே, சிக்கிமில் 2 கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன, அதுவும் சிறையில்தான் பொருத்தப்பட்டுள்ளன. மிசோரமில் 40 சிறைகளில் 147 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்தியபிரதேசத்தில் 1,117 போலீஸ் நிலையங்களில் 859 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என மாநில வாரியான விவரங்களை எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க இணைய வசதி அவசியமாகிறது. அங்குள்ள போலீஸ் நிலையங்களில் மின்சாரம், இணையவசதி வழங்குவதை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மாவட்டம் வாரியாக காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவை செயல்படுகின்றனவா என்ற விவரம் வேண்டும். அதேபோல, கண்காணிப்பு கேமராக்களை யார் கண்காணித்து, போலீஸ் அத்துமீறல், அராஜகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பான விவரங்கள் வேண்டும் என தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் 45 நாட்களுக்கு மேல் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதுதொடர்பான தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒலிப்பதிவுடனான கேமரா பொருத்துவது தொடர் பான சாத்தியக்கூறுகள் என்ன என கேள்வி எழுப்பியதோடு, இந்த அனைத்து கேள்விகளுக் கான பதிலை உள்ளடக்கி மேலதிக பரிந்துரைகளோடு கூடுதல் பிரமாணபத்திரத்தை வரும் 27-ந் தேதிக்குள் தாக்கல்செய்ய வக்கீல் சித்தார்த் தவேவுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Next Story