நிவர் புயல்: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு


நிவர் புயல்:  புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2020 3:03 AM GMT (Updated: 26 Nov 2020 3:03 AM GMT)

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.  இதன்பின்னர் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது.  அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்துள்ளது.

புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.  அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல், புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதன்பின்னர் அடுத்த 3 மணிநேரத்தில் அதன் வேகம் மெல்ல குறைந்து 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.  இதனையடுத்து, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.  எனினும், புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story