80 ஆயிரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுப்பு தான உறுதிமொழி - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு


80 ஆயிரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுப்பு தான உறுதிமொழி - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு
x
தினத்தந்தி 27 Nov 2020 7:20 PM GMT (Updated: 27 Nov 2020 7:20 PM GMT)

உறுப்பு தான உறுதிமொழி எடுத்துக்கொண்ட 80 ஆயிரம் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

தேசிய உறுப்புதான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு 14-ந்தேதி முதல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உறுப்பு மீட்டெடுப்பு வங்கி அமைப்பும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து மேற்கொண்ட இந்த பிரசார நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்களும் கடந்த 22-ந்தேதி முதல் இணைந்தனர்.

இந்த பிரசாரத்தின் நிறைவாக நேற்று 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் உறுப்பு தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ‘மரணத்துக்குப்பின்னும் நாட்டுக்கு சேவையாற்றுவோம்’ என்ற கடமையின் அடிப்படையில் அவர்கள் இந்த உறுதிமொழி எடுத்துள்ளனர்.

சி.ஆர்.பி.எப். வீரர்களின் இந்த சேவை நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டியுள்ளார். சி.ஆர்.பி.எப். வீரர்களின் இந்த உறுதிப்பாடு மரணத்துக்கு பிந்தைய அவர்களது சேவையை உறுதி செய்திருப்பது மட்டுமின்றி, மக்களிடையே இந்த உன்னத நோக்கம் மேலும் வலுப்பெற உத்வேகத்தையும் அளிக்கும் என அவர் கூறினார்.

Next Story