2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது


2-வது காலாண்டில் சரிவு 7.5 சதவீதம்தான்: இந்திய பொருளாதாரம் மீள்கிறது
x
தினத்தந்தி 28 Nov 2020 3:46 AM GMT (Updated: 28 Nov 2020 3:46 AM GMT)

கட்டுமான துறை முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், 2-வது காலாண்டில் 8.6 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ளது.

மும்பை,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2020 ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு கட்டுப்பாடு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. தொழில், வர்த்தக துறைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பயனாக பொருளாதார சரிவில் இருந்து மீள முடியாவிட்டாலும்கூட சரிவின் அளவு குறைந்து இருப்பது, மீள்வதற்கான அறிகுறியாக அமைந்து ஆறுதல் அளிக்கிறது. 

அந்த வகையில் 2-வது காலாண்டில் (2020 ஜூலை-செப்டம்பர்) பொருளாதாரம் 7.5 சதவீதம் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் பொருளாதாரம் 4.4 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

2-வது காலாண்டில் உற்பத்தி துறை ஆச்சரியப்படத்தக்க அளவில் 0.6 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. முதல் காலாண்டில் 39 சதவீதம் சரிவை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாய துறை 3.4 சதவீதம், மின்சக்தி மற்றும் எரிவாயு துறை 4.4 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

கட்டுமான துறை முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், 2-வது காலாண்டில் 8.6 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்கள் மிகவும் ஊக்கம் அளிப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.


Next Story