ஆந்திராவில் பலத்த மழை: கடந்த 3 நாட்களில் 8 பேர் பலி


ஆந்திராவில் பலத்த மழை: கடந்த 3 நாட்களில் 8 பேர் பலி
x
தினத்தந்தி 28 Nov 2020 6:59 PM GMT (Updated: 28 Nov 2020 6:59 PM GMT)

ஆந்திராவில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமராவதி, 

ஆந்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 3 நாட்களில் சித்தூர் மாவட்டத்தில் 6 பேரும், கடப்பா மாவட்டத்தில் 2 பேரும் இறந்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான் வழியே சுற்றிப் பார்த்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதியில் அதுதொடர்பான ஆய்வுக்கூட்டத்தைநடத்தினார். அதில், துணை முதல்-மந்திரி கே.நாராயணசாமி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.500 வழங்கவும் உத்தரவு அளித்தார்.

பயிர் இழப்பு கணக்கீடு போர் கால அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் டிசம்பர் இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை விரைவில் செயல்படுத்துமாறும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

Next Story